×

பிளஸ் 2 பொதுத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் 95.72 சதவீத தேர்ச்சி மாணவர்கள் தேர்ச்சியில் கடும் சரிவு

நாகர்கோவில், மே 7: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குமரி மாவட்டம் 95.72 சதவீத தேர்ச்சியை பெற்று தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 14 வது இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 257 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 149 மாணவர்கள், 11 ஆயிரத்து 411 மாணவிகள் என்று மொத்தம் 21 ஆயிரத்து 560 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் 9429 மாணவர்கள், 11208 மாணவிகள் என்று மொத்தம் 20 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 92.91 சதவீதமும், மாணவிகள் 98.22 சதவீதமும் என்று மொத்தம் 95.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 63 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் மொத்தம் மாணவர்கள் 2850 பேரும், மாணவிகள் 3062 பேரும் என்று 5912 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் மாணவர்கள் 2560 பேரும், மாணவிகள் 2976 பேரும் என்று மொத்தம் 5527 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் மாணவர்கள் 89.82 சதவீதமும், மாணவிகள் 96.90 சதவீதமும் என்று மொத்தம் அரசு பள்ளிகளில் 93.49 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

மகளிர் பள்ளிகள்: குமரி மாவட்டத்தில் பள்ளிகள் வாரியாக ஆடவர் பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு 607 பேர் எழுதியதில் 567 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.41 சதவீத தேர்ச்சி ஆகும். மகளிர் பள்ளிகளில் 2963 பேர் தேர்வு எழுதினர். இதில் 2925 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.72 சதவீத தேர்ச்சி ஆகும். இருபாலர் பள்ளிகளில் 17 ஆயிரத்து 990 மாணவ மாணவியர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 145 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.30 சதவீத தேர்ச்சி ஆகும். குமரி மாவட்டத்தில் மாணவர்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 93.42 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 97.65 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 720 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். மாணவிகள் 203 பேர் மட்டும் தோல்வியை தழுவியுள்ளனர். அந்த வகையில் மொத்தம் மாணவ மாணவியர் 923 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 14 வது இடத்தில் உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் சரிவு மாவட்ட தேர்ச்சி விகிதத்தையும் சரிவடைய செய்துள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் 9வது இடத்தில் உள்ளது.

நாகர்கோவில் 95.77% தேர்ச்சி
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 4756 மாணவர்கள், 5619 மாணவிகள் என்று 10 ஆயிரத்து 375 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 4435 மாணவர்கள், 5501 மாணவிகள்என்று 9936 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.77 சதவீதம் ஆகும். மாணவர்கள் 93.25 சதவீதமும், மாணவிகள் 97.9 சதவீதமும் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
மார்த்தாண்டம் 95.67% தேர்ச்சி
மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5393 மாணவர்கள், 5792 மாணவிகள் என்று 11 ஆயிரத்து 185 பேர் தேர்வு எழுதியதில் 4994 மாணவர்கள், 5707 மணவிகள் என்று 10 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.67 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் 5,393 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 4994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.6 சதவீதமும், மாணவிகள் 98.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 1.33 சதவீதம் சரிவு
கடந்த ஆண்டு (2023) குமரி மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.05 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தது. அப்போது 10 ஆயிரத்து 808 மாணவர்கள், 11 ஆயிரத்து 578 மாணவிகள் என்று 22 ஆயிரத்து 386 பேர் தேர்வு எழுதியிருந்ததில் 10 ஆயிரத்து 269 மாணவர்கள், 11 ஆயிரத்து 456 மாணவிகள் என்று 21 ஆயிரத்து 725 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவர்கள் 95.01 சதவீதமும், மாணவிகள் 98.95 சதவீதமும் என்று 97.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் 1.33 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் 95.72 சதவீத தேர்ச்சி மாணவர்கள் தேர்ச்சியில் கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,district ,Nagercoil ,Kumari district ,Tamil Nadu ,Kanyakumari District ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி